20/09/2015

என் ஊர்: கஞ்சாநகரம்

கஞ்சாநகரம் பெயர்க்காரணமும் மானக்கஞ்சாற நாயனாரும்

காவிரியால் வளம் பெற்று சிறந்து விளங்கும் அனேக ஊர்களில் கஞ்சாநகரமும் ஒன்று. தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது  இவ்வூர், வயல்கள் வளம் கொழிக்கும், எங்கும் பசுமை நிலைக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. ஆனால்,
கஞ்சாநகரம், உன் ஊரில் கஞ்சா அதிகம் விளையுமா? உங்கள் ஊரில் உள்ளவர்கள் கஞ்சத்தனமானவர்களா? இந்தக் கேள்விகளை அதிகம் கேட்டுக் கேட்டு மனம் நொந்த நாட்கள் அதிகம் உண்டு. அவற்றிற்கு விளக்கம் தருவதாக இக்கட்டுரை அமைகிறது.
கஞ்சாநகரமும் பெரிய புராணமும்
கஞ்சாநகரத்தைப் பற்றி கூற வேண்டுமானால் முதலில் நான் பெரிய புராணத்தைப் பற்றி விளக்கியாக வேண்டும். நாயன்மார்களின் வரலாறுகளை விளக்கிக் கூறும் இந்நூல் திருத்தொண்டர் புராணம் அல்லது பெரிய புராணம் எனப்படுகிறது. இது சேக்கிழார் பெருமானால் சைவ சமயத்தை விளக்கும் வகையில் சுந்தரமூர்த்தி நாயனாரைத் தலைவனாகக் கொண்டு காப்பியமாக இயற்றப்பட்டது. இந்நூல் திருத்தொண்டர் தொகை என்ற நூலினை அடியொற்றி எழுதப்பட்டது.
63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் இந்நூல் மூன்று காண்டங்களையும் 13 சருக்கங்களையும் கொண்டுள்ளது. பன்னிரண்டாம் திருமுறையாக உள்ள இது முதற்காண்டத்தில் இலைமலிந்த சருக்கத்தில் பன்னிரண்டாவதாக மானக்கஞ்சாற நாயனார் புராணம் உள்ளது.
மானக்கஞ்சாறநாயனார் புராணம்
“கஞ்சநகர் மானக்கஞ் சாற னார்ச்சீர்க்
காதன்மகள் வதுவைமணங் காண நாதன்
வஞ்சமலி மதவிரதத் தலைவ னாகி
வந்துபுகுந் தவளாக மகிழ்ந்து நோக்கிப்
பஞ்சவடிக் காமென்ன வரிந்து நீட்டும்
பத்தரெதீர் மறைந்திறைவன் பணித்த வாக்கா
லெஞ்சலில்வண் குழல்பெற்ற பேதை மாதை
யேயர்பிராற் குதவியரு ளெய்தி னாரே”
என்று போற்றப்படும் இடமாகவும் மானக்கஞ்சாறர் வாழும் புண்ணிய பூமியாகவும் திகழ்ந்தது கஞ்சாநகரம் என்னும் திருப்பதி.
“மலைமலிந்த தோள் வள்ளல் மானக் கஞ்சாறன்
அடியார்க்கும் அடியேன்”
என்று போற்றப்படும்படி வாழ்ந்த மானக்கஞ்சாறர் பெருமங்களம் வைதீஸ்வரன்கோயில், திருப்புன்கூர், ஆனந்ததாண்டவபுரம், கஞ்சாநகரமாகிய தமது ஊர் ஆகிய ஐந்து ஊர்களையும் சேர்த்து கஞ்சாநகரத்தைத் தலைமையாகக் கொண்டு ஆண்டுவந்தார். செல்வங்கள் பல இருந்தும் பிள்ளைச் செல்வம் இல்லையே என்ற குறை தீற சிவத்தின் பேற்றால் பெண் மகளையும் பெற்றெடுத்து வளர்த்தனர். வளர்பிறை போன்று நாளொரு பொழுதும் பொழுதொரு மேனியுமாக வளர அவளுக்கு புண்ணியவர்த்தினி எனப் பெயரிட்டு தாலாட்டி வளர்த்தனர்.
மானக் கஞ்சாறரும் ஏயர்கோன் கலிகாமரரும்
குழந்தைப் பருவம் மாறி மணக்கோலம் எய்தும் வயது வந்ததால் அருகேயுள்ள வேளாண் குடியில் பிறந்த சிறந்த சிவபக்தரான ஏயர்கோன் கலிகாமரை மணம் பேசி முடித்தனர். திருமண நாள் நெருங்கவே அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்றது. சுற்றமும் நட்பும் சூழ ஏயர்கோன் கலிகாமர் கஞ்சாறூர் என்னும் தற்பொதைய கஞ்சாநகரத்தை வந்தடைந்தனர்.
மானக்கஞ்சாறரின் எம்பக்தியை உலகறியச் செய்யும் விதமாகவும் பலநாள் வேண்டுதலுக்கு விடை அளிக்கும் விதமாகவும் விடை இல்லாமல் சிவன் தனியே தோன்றி தவக்கோலம் பூண்டு வந்தான் அவர்களை சோதிக்க. சோதிவடிவான சிவன் வந்தான் சோதி இல்லாமல் ஆண்டியாக.
திருநீறு, எலும்பு மாலை, பரட்டை தலை, வெண்தாடி, முப்புரி நூல். சிவனின் அங்க அடையாளங்களாய் பார்ப்பதற்கு  இவனில்லை சிவனில்லை என்று தோன்ற வந்தான்.
சிவத்தொண்டராகிய கஞ்சாறரின் இயல்பையறிந்து விளையாட வந்தான். சிவபக்தியை உலகறிவிக்க வந்தான். மறுபுறம் மணக்கோலத்தில் மகள் மங்கலகரமாக மாலை அணிந்து மணமேடையேறும் நாளில் சிவனடியார்க்கு இல்லை என்னாமல் கொடுக்கும் கஞ்சாறர், தம் மார்பில் அணிந்திருந்த முப்புரி நூல் (பூணூல்) மக்கிவிட்டதாகவும் அதற்கு உன் மகளின் கருங்கூந்தல் வேண்டும் எனவும் கேட்க, மகளைக் கூப்பிட்டு அறிவாளால் மகளின் கூந்தலை வெட்டித் தந்த அந்த தருனம் சற்றும் சிந்தியாமல்… மணமகன் வெளியில் நிற்க… அடியார்க்காக இப்படி என்று அனைவரும் யோசிக்க… மன்றம் திகைத்தது.
மகளின் கூந்தல் அடியார்க்கு என்ற எண்ணத்தில் கஞ்சாறர். அடியார்க்கு அடி செய்யும் சேவையாக தம் மனைவியாகப் போகிறவள் செயல்பாடு கண்டு மகிழ்ந்து ஏயர்கோன். இப்படியாக நேரம் நகர…
அடியாராகிய சிவன் தன் சுயரூபம் காட்டி உன் பெருமையை உலகறிய செய்யவே அடியவராக வந்தேம் என்று கூறி பூணூலை (கருங்கூந்தலை) மகளிடமே கொடுத்தார். அனைவரின் கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர;. மகள் புண்ணியவர்த்தினியால் புண்ணியம் பெற்ற மானக்கஞ்சாறரரும்இ ஏயர;கோன் கலிகாமரும் சிவத்திடம் நாயனார் ஆனார்கள்.
மானக்கஞ்சாற நாயனாரால் இவ்வூர் இன்று கஞ்சாநகரம் என்று அழைக்கப்படுகிறது. ஆனந்ததாண்டவபுரத்தில் சில காலம் மாமன் வீட்டில் வாழ்ந்தாலும் சொந்தம் இங்குதான்.
இங்குள்ள புகழ்பெற்ற துங்கபாலஸ்தனாம்பிகை உடனுறை காத்ர சுந்தரேஸ்வரர் கோயில் கார்த்திகை நட்சத்திர பரிகார தலமாக உள்ளது. அதனுள், மானக்கஞ்சாற நாயனார் - புண்ணியவர்த்தினி - ஏயர்கோன் கலிகாம நாயனார் ஆகியோர்க்கு தனிச் சிலைகள் உள்ளன. சிறப்பு வழிபாடுகள் உண்டு.
கஞ்சாறூர் – கஞ்சானூர் - கஞ்சாநகரம். மானம் – பெருமை, பெருமைமிகு கஞ்சாறர் என்பது பிறகு கஞ்சாநகரம் என்பதற்காகிற்று. (காரைக்காலம்மையார், வில்லிப்புத்தூரார் போன்று) இதனைப் பறை சாற்றும் எச்சங்கள் இன்றும் எம்மூரில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எம் ஊர் துங்கபாலஸ்தனாம்பிகை உடனுறை காத்ர சுந்தரேஸ்வரர்  கோயிலுக்கு ஒருமுறை வந்துதான் பாருங்களேன்.
நன்றி.

1 comment:

  1. ஒவ்வொருவரும் தனது ஊரின் பெருமைகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். இவ்வளவு சிறப்புகள் நிறைந்த உங்கள் ஊர் பற்றி முடிந்தால் தமிழ் விக்கிபிடீயாவில் எழுதுங்களேன். இன்னும் நிறைய பேரை சென்றடையும். நம்ம ஊரும் மயிலாடுதுறைக்கு பக்கந்தாங்க. திருக்கடையூருக்கும் தரங்கம்பாடிக்கும் இடையில் இருக்கும் காழியப்பநல்லூர் ஊராட்சியை சேர்ந்த எருக்கட்டாஞ்சேரி எனது சொந்த ஊர். உங்கள் ஊரைப் பற்றி உங்களுக்கு தெரிந்த அளவிற்கு எனது ஊரைப் பற்றி எனக்குத் தெரியவில்லையேயென ஆதங்கமாய் உள்ளது.

    ReplyDelete