22/09/2015

தமிழ் கணினி உலகிற்கு உத்தமத்தின் பங்களிப்பு

முன்னுரை
தமிழ்மொழியின் வளர்ச்சிப் பணியில் தனியார் அமைப்புகள் அரசுத் துறையுடன் இணைந்து பலவாறாக பங்காற்றி வருகின்றன. தனியார் அமைப்புகளின் மூலம் இணையத் தமிழானது இன்று வெகுவாக வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல நிறுவனங்கள் தாங்களே பொருள்கள் செலவிட்டு இணையதளங்களை உருவாக்கி தமிழ் வளர்ச்சியைத் தொடர்ந்து செய்து வருகின்றன. அவ்வகையில, உத்தமம் (INFITT) அமைப்பானது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் இணையத்தில் தமிழ் வளர ஆற்றிய பங்கினையும் விவரிப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
உத்தமம்
உத்தமம் என்பது தமிழை இணையத்தின் வழியாகக் கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட ஒரு உலகளவிலான கூட்டமைப்பாகும். ”INFITT is a global non-profit non-govt. organization devoted to promoting Tamil computing. Officially registered as NPO in California, USA.”1 என்ற விதத்தில் இது இலாப நோக்கமின்றி தமிழ் கணினி பற்றியதான இயங்கும் அரசு சாரா அமைப்பாக கலிபோர்னியாவில் பதிவுபெற்று விளங்குகிறது.
“அது நிமிர்ந்து நிற்க ஒரு முதுகெலும்பாய்…
பரவி வியாபிக்க ஒரு நரம்பு மண்டலமாய்…
கிளர்ந்து வாழ ஒரு ரத்தமாய்…
துடித்து ஜீவிக்க இதயமாய்…
தமிழ் சுவாச நுரையீரலாய்…
இருக்க வேண்டிய கட்டமைப்பின் தர நிலை உயர உதவும் ஒரு மன்றமே INFITT.org”2 என்று புதுத் திண்ணை உத்தமத்தின் நிலை குறித்து விவரிக்கிறது.
உத்தமத்தின் தோற்றம்
இணையத்தில் தமிழ்மொழியினை வளர்ச்சிபெயச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்குடன்  நடத்தப்பட்ட இணைய மாநாடுகளில், முதல் மாநாடு 1997 ல் சிங்கப்பூரிலும் இரண்டாவது மாநாடு சென்னையிலும் நடைபெற்றது. இம்மாநாடுகளின் நோக்கமாக விசைப்பலகையில் டேம், டேப் போன்ற தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்த வேண்டும், இணையத்தில் தமிழைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றியதேயாகும்.
மூன்றாவது தமிழ் இணைய மாநாடு, இலங்கையில் 2000 இல் நடைபெற்ற பொழுது, தமிழ் இணையம் தொடர்பானத் தனிப்பட்ட குரல்களையெல்லாம் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட அமைப்பே “உத்தமம்“ ஆகும். INFITT என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இது உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (International Fourm for Information Technology in Tamil) என்பதன் சுருக்கமே உத்தமம் என்பதாகும்.
www.infitt.org என்ற இணைய தளத்தை நிறுவி அதன் மூலம் உலகளவில் தமிழ் ஆர்வலர்களையும் இணைய இலக்கிய அமைப்புகளையும் ஒன்றிணைத்து தகவல்களைத் தெரிவிக்க வழிவகை செய்தது. இவ்வமைப்பு மூலம் தற்போது தனது பதினான்காவது மாநாட்டினை சிங்கப்பூரின் சிம் பல்கலைக்கழகத்தில் நடத்தியது. 
உத்தமத்தின் உறுப்பினர்கள்
உத்தமம் அமைப்பு 2000 ல் தமிழ் இணைய மாநாட்டில் தொடங்கப்பட்ட போது, தமிழகத்திலிருந்து முனைவர் மு. பொன்னவைக்கோ, பேரா. வா.ச. குழந்தைசாமி,  மு. ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர்களையும், மலேசியாவிலிருந்து முத்துநெடுமாறன் (முரசு அஞ்சல் தட்டச்சு உருவாக்கியவர்), சிங்கையிலிருந்து அருண்மகிழ்நன் போன்றொர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அம்மாநாட்டில் இவர்களின் மூலம் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
உத்தம அமைப்பின் பணிக்குழுக்கள், “ 1. தமிழ்க் கலைச்சொல் தொகுப்பு, 2. யூனிக்கோடு தமிழ் (UNICODE ஆய்வு) 3. இணையத்தள தமிழ் முகவரி அமைத்தல், 4. தமிழ் வரிவடிவக் குறியீட்டுத் தரப்பாடு, 5. ஆங்கில வரிவடிவத் தமிழ் தரப்பாடு, 6. தமிழ் எழுத்துப் படித்தறிதல் (Tamil OCR), 7. லினக்ஸில் தமிழ் (Tamil in Linux) 8. தமிழ் அனைத்து எழுத்துரு 16 –பிட்டு தரம். (TUNE/TACE)”3 என்று பிரிக்கப்பட்டு உலகளவில் தமிழ் தொழில்நுட்ப சான்றோர்களை இணைத்து இன்றளவும் மாநாடுகளை நடத்துகின்றது.
உத்தமமும் மாநாடுகளும்
மூன்றாம் தமிழ் இணைய மாநாட்டிலிருந்து சென்ற மே & ஜீன் 2015ல் சிங்கப்பூரில் நடைபெற்ற 14வது இணைய மாநாடு வரை தன்னுடைய பதினைந்தாவது ஆண்டு விழாவைக் கொண்டாடியுள்ளது உத்தமம் நிறுவனம். ஒவ்வொரு மாநாட்டிலும் கணினி – இணையம் தொடர்பானக் கருப்பொருள்களை முன்வைத்து இயங்கிவருகிறது. இதில்,
நான்காவது தமிழ் இணைய மாநாடு (2001 - மலேசியா) – வளர்ச்சிக்கான வழிகள் என்று மின்வணிக மொழியைத் தமிழாக்கி தமிழை வணிக மொழியாக்கும் முயற்சி என்ற கருப்பொருளையும்,
ஐந்தாவது தமிழ் இணைய மாநாடு (2002 - கலிபோர்னியா) – மின் இணையப் பயன்பாட்டில் மக்களிடையே நிலவும் இடைவெளியைக் குறைத்தல் என்ற கருப்பொருளையும்,
ஆறாவது தமிழ் இணைய மாநாடு (2003 – சென்னை) – தமிழ்க் கல்விக்குத் தகவல் தொழில்நுட்பம் என்ற கருப்பொருளையும்,
ஏழாவது தமிழ் இணைய மாநாடு (2004 சிங்கப்பூர்) – நாளைய தமிழ் தகவல் தொழில்நுட்பம் என்ற கருப்பொருளிளையும்
எட்டாவது தமிழ் இணைய மாநாடு (2009 – ஜெர்மனி) – கணினிவழித் காண்போம் தமிழ் என்ற கருப்பொருளிலும்
ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு (2010 – கோயம்புத்தூர்) – கணினி தமி்ழ்மொழிக் கற்றல், கணினி மொழியியல் என்ற கருப்பொருளில் செம்மொழி மாநாட்டுடனும்
பத்தாவது தமிழ் இணைய மாநாடு (2011 – பென்சில்வேனியா) – கணினியினூடே செம்மொழி என்ற கருப்பொருளிலும்
பதினோறாவது தமிழ் இணைய மாநாடு (2012 – சிதம்பரம்) – செல்பேசி மற்றும் பலகைக் கணினிகளில் தமிழ்க் கணிமை என்ற கருப்பொருளிலும்,
பனிரெண்டாவது தமிழ் இணைய மாநாடு (2013 – மலேசியா) -  “கையடக்கக் கணினிகளில் தமிழ்ச் கணிமை”4 என்ற கருப்பொருளிலும்
பதிமூன்றாவது தமிழ் இணைய மாநாடு (2014 – புதுச்சேரி) – ”தமிழ்மொழியில் இயல்மொழிப் பகுப்பாய்வு”5 என்ற கபருப்பொருளிலும்
பதிநான்காவது தமிழ் இணைய மாநாடு (2015 – சிங்கப்பூர்) – ”கணினிவழிக் கற்றல், கற்பித்தல், இயல்மொழியாய்வு, செல்பேசித் தகவல்நுட்பம்”6 போன்ற கருப்பொருள்களிலும்
என்ற கருப்பொருளிலும் விவாதித்து கருத்துக்களை வெளியிடும் வகையில் வல்லுனர் குழுவும் சான்றோர்களின் கட்டுரைகளும் வாசித்து விவாதிக்க இவ்வுத்தமம் அமைப்பு காரணமாக அமைந்தது.
உத்தமத்தின் பணிகள்
தமிழ்வளர்ச்சி்க்குப் பல வகையிலும் உதவி புரியும் வகையில் இவ்வமைப்பு செயல்படுகிறது. இது,
அடுத்தடுத்தத் தமிழ் இணைய மாநாடுகள் நடைபெறுவதைத் திட்டமிடவும்
அவை நடைபெறும் இடத்தைத் தேர்வு செய்திடவும்
மாநாடுகளின் கருப்பொருள்களை முன் வைத்திடவும்
தமிழ் இணைய மாநாடுகள் தொடர்பான அறிக்கைகளை வெளியிடவும்
மத்திய, மாநில அரசுகளின் துணையுடன் செயல்படவும்
இணையத்தமிழ் வளர்ச்சிக்கு தேவையான மாற்றங்களைச் செய்திடவும்
உத்தமம் அமைப்பானது பேருதவி புரிகின்றது.
முடிவுரை
தமிழ்மொழியினை இணையத்தில் கொண்டு செல்வதற்கு உத்தமம் நிறுவனம் பெரும்பங்காற்றி வருகிறது. தமிழ் இணைய மாநாடுகள் மூலம் இணையத்தின் வழியே கணினியிலும் கைக் கணினிகளிலும் தமிழ் மொழியை கொண்டு செல்லப்படுவதற்கு உத்தமம் அமைப்பு செயல்பட்டுள்ளதையும் இன்றளவும் தமிழ்ச் சான்றோர்களாலும் தொழில்நுட்ப வல்லுனர்களாலும் இவ்வமைப்பு வளர்க்கப்பட்டு வருவதையும் இவ்வளர்ச்சி தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிகின்றது என்பதை அறிய முடிகிறது. இதுபோன்ற அமைப்புகள் இணையத்தில் தமிழ்மொழியை வளர்க உதவுகின்றன என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
சான்றெண் விளக்கம்
www.infitt.com, பா.நாள் 19.09.2015
www.Puthu.thinnai.com, பா.நாள் 20.09.2015
மு. பொன்னவைக்கோ, இணையத்தமிழ் வரலாறு, ப. 61
www.tamil.oneindia.com, இணைய இதழ், பா.நாள்: 21.09.2015
www.mudukulathur.com, பா.நாள். 22.09.2015
www.ta.m.wikipedia.org/wiki, பா.நாள். 22.09.2015


உறுதிமொழி
"தமிழ் கணினி உலகிற்கு உத்தமத்தின் பங்களிப்பு" என்னும் தலைப்பிலான இக்கட்டுரை என் சொந்த முயற்சியால் உருவானது என்றும்
இப்பதிவு, “வலைப்பதிவர் திருவிழா – 2015” மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015” க்காகவே எழுதப்பட்டது என்றும்
இதற்கு முன் வெளியான படைப்பல்ல முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்.

21/09/2015

கைக்கணினியும் ஆண்ட்ராய்டு தமிழ் குறுஞ்செயலிகளும்

தொடக்கவுரை
தமிழ்மொழி இன்று இணையத்தின் மூலம் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கிறது என்றால் அது மிகையல்ல. கணினியில் வளர்ச்சியானது தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு பேருதவி செய்வதோடு காலத்திற்குத் தக்கவாறு தமிழ் பாதுகாக்கப்படுகிறது. இதற்கு இணையம் பல வடிவங்களில் உதவி புரிகின்றது எனலாம். அவ்வகையில் கூகுள் இணைய தேடு தளத்தில் வழியே உருவாக்கப்பட்ட கூகுள் கடையில் (Play Store) கிடைக்கும் தமிழ் மொழி, இலக்கியம் தொடர்பான குறுஞ்செயலிகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
குறுஞ்செயலிகளும் தமிழும்
இணையத்தின் தேடுபொறிகளில் மிக முக்கியமானது கூகுள் பொறியாகும். இதில் அனைத்து வகையான தகவல்களையும் பெற முடியும். “கடந்த 2012 மார்ச் முதல் கூகிள் நிறுவனம் தனது ஆன்டிராய்டு அங்காடியையும் இசைச் சேவையையும் இணைத்து கூகிள் பிளே என்ற இணையக் கடையைத் தொடங்கியது.”1 இக்கடையின் மூலம் கிடைக்கும் தமிழ் குறுஞ்செயலிகள் பலவிதங்களில் தமிழ் வளர்ச்சிக்கு உதவுகின்றன. அவ்வகையில் தமிழ்க் குறுஞ்செயலிகள் கீழ்க்கண்டவாறு.
     தமிழ் எழுத்துரு
     தமிழ் இலக்கியம்
     இக்கால இலக்கியம்
     மருத்துவம்
    குழந்தை பாடல்கள்
     சமையல்
     பக்தி
     செய்தி
     அகராதி
என்று வகைப்படுத்திக்கொண்டே செல்லலாம். இவற்றின் மூலம் தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்று விளங்குகிறது. இக்குறுஞ்செயலிகளை தங்களளின் கைக் கணினிகளில் நிறுவுவதன் மூலம் அந்தத் தலைப்பு தொடர்பான தகவல்களைப் பெற முடிகிறது.

தமிழ் எழுத்துரு குறுஞ்செயலிகள்
தமிழில் தட்டச்சு செய்யக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட எழுத்துக்களைக் கொண்டனவாக இவை விளங்குகின்றன. மேலும், இவற்றில் எழுத்துருக்ளுடன் மென்பொருள்களும் உள்ளன.
பொன்மடல், முரசு அஞ்சல், பிரமுகி, தமிழ் விசை, எழுத்தாணி, த ஜெஸ்ட் தமிழ், பாணினி, இண்டிக், தமிழ் ஒருங்குறி விசைப்பலகை, தமிழ் புள்ளியியல் விசைப்பலகை, டைப் தமிழ், சுவரச்சக்ரா இந்திய மொழி மாற்றி, போன்றனவற்றைக் குறிப்பிடலாம். விசைப்பலகை மட்டுமல்லாமல் இதில் சில இலக்கண விதிப்படி இயங்கும் மென்பொருள்களாகவும் உள்ளன. இவற்றின் மூலம் எழுத்துருக்களை தட்டச்சு செய்தி வெளியிட முடிகிறது.
இலக்கியக் குறுஞ்செயலிகள்
இலக்கியத்தைக் கற்பிக்கும்படியான தொல்காப்பியம், ஆத்திச்சூடி, மூதுரை, நல்ல தமிழ் அறிவோம், தமிழ் கற்க - 1, வாழ்க தமிழ், இந்தமிழ், திருக்குறள் தமிழ் ஆங்கிலம், தமிழ் கற்போம், திருக்குறள் பொருளுரை, தமிழ் பழமொழிகள், போன்று இலக்கியம் தொடர்புடைய குறுஞ்செயலிகளின் அதிகம் கிடைக்கின்றன இவற்றின் மூலம் தமிழ் இணையத்தில் மட்டுமல்லாமல் கைகணினிகளினால் எல்லா இடங்களிலும் பரவி வருகிறது.
இக்கால இலக்கியங்கள்
இக்கால இலக்கியங்களைத் தரும் குறுஞ்செயலிகளாக, பாரதியார் கவிதைகள்,  பாரதிதாசன் பாடல்கள், கண்ணதாசன் பாடல்கள்,  சுந்தரராமசாமி கதைகள், பொய்மான் கரடு, பார்த்திபன் கனவு, அலைஓசை, தியாகபூமி, மகுடபதி, பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், சோலைமலை இளவரசி, மோகினி தீவு போன்ற கல்கியின் நாவல்கள், கல்கி சிறுகதைகள், புதுமைப்பித்தன் கதைகள், அசோகமித்திரன் சிறுகதைகள், ஜெயகாந்தன் சிறுகதைகள், மு.வ.சிறுகதைகள், தி.ஜானகிராமன் கதைகள், சுஜாதா சிறுகதைகள், அண்ணாதுரை கதைகள், புதுமைப்பித்தன் சிறுகதைகள், நகைச்சுவை, 100 சிறந்த கதைகள், தண்ணீர் தேசம், பட்டுக்கோட்டைப் பாடல்கள், தமிழ்ப் பாடல்கள், தமிழ் காமிக்ஸ் போன்றன நவீன கால இலக்கியங்களைப் பற்றிய தெளிவும் தமிழ்ப் புதினங்களைப் பற்றிய விளக்கங்களும் கிடைக்க வழிவகுக்கிறது. மேலும், பெரியார், காமராசர் வாழ்க்கை வரலாறு பற்றிய குறுஞ்செயலிகளினால் அவர்களைப் பற்றிய உண்மை நிலையைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

மருத்துவம்
வீட்டில் இருக்க வேண்டிய முக்கியமான கை வைத்தியம் பற்றியும் தமிழ் மருத்துவம், சித்த மருத்துவம் பற்றியதுமான செயலிகளின் மூலம் மருத்துவரையே வீட்டிற்கு அழைத்து வருவதைக் காண முடிகிறது.
குழந்தைப் பாடல்கள்
ஒவ்வொரு ஆண்ட்ராய்டு பேசிகளிலும் கைக்கணினிகளிலும் இருக்க வேண்டிய பாடல்களாக குழந்தைப் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இக்குறுஞ்செயலிகளில், மழலைப் பாடல்கள், பாப்பாப் பாடல்கள், குழந்தைப் பாடல்கள், மழலையின் மகத்துவம் போன்ற வகைகளில் உள்ளன.
சமையல்
உணவகத்தினை வீட்டிற்கே கொண்டு வரும் விதமாக பல வகைகளில் சமையல் குறிப்புகள் அடங்கிய செயலிகள் கூகுள் கடையில் அதிகம் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் புதுப்புது சமையல் வகைகளான, தமிழ்நாடு இனிப்பு வகைகள், குழம்பு வகைகள், சட்னி வகைகள்,  சூப் வகைகள், அசைவ உணவுகள், தமிழ்நாடு பிரியாணி வகைகள், செட்டிநாடு சமையல், தமிழ்நாடு சிற்றுண்டி வகைகள், தமிழ்நாடு நொறுக்கு தீனிகள், தமிழ்நாடு ரசம் வகைகள் போன்றன கிடைக்கின்றன.
பக்தி
  ஆன்மீகம் தொடர்பான பல செயலிகள் இக்கடையில் கிடைக்கின்றன. கந்தசஷ்டிகவசம், சைவ மகிமை, தெட்சிணாமூர்த்தி அஸ்டகம், சரஸ்வதி பாடல்கள், விஷ்ணு சகஸ்ரநாமம், வேதாகமம், பஜகோவிந்தம், கஜேந்திர மோட்சம், திருக்குராஆன் போன்ற குறுஞ்செயலிகளின் மூலம் இவற்றை பாடலாகக் கேட்கும்படியும் இவை உள்ளன.
செய்திகள்
இச்செயலிகள், வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் என பல வடிவங்களின் கிடைக்கின்றன. தமிழ் செய்தித்தாள்கள், இலங்கைத் தமிழ் செய்தித்தாள்கள், தமிழ் செய்திகள், நியூஸ் மற்றம் இதழ்கள், புதுத்தமிழ் ரெடியோ, ஆஸ்திரேலியன் தமிழ் ரேடியோ, உதயன் தமிழ் செய்திகள் போன்றவை தமிழகச் செய்திகள், இலங்கைச் செய்திகள், உலகச் செய்திகள் என்ற விதத்தில் கிடைக்கின்றன. செய்தித் தாள்களைத் திரட்டித் தரக்கூடிய செயலிகளும் இணையத்தில் உள்ளன.
அகராதி
தமிழில் விளக்கங்களைத் தரக்கூடிய தமிழ் சிறந்த அகராதி, ஆங்கிலம் தமிழ் அகராதி, சூப்பர் விக்கிபீடியா போன்ற அகராதிகள் பல இணைய கடையில் கிடைக்கின்றன.
குறுஞ்செயலிகளின் மூலம் தமிழ் வளர்ச்சி
இணையம், மின்னஞ்சல் அனுப்புவதற்கான நிலை மாறி தற்போது ஆண்ட்ராய்டு கைக்கணினிகளினால் தமிழில் இலக்கியம் தொடர்பான குறுஞ்செயலிகள் பல பெருகியுள்ளன. இவற்றின் மூலம் இணையத்தமிழின் புதிய வகையாக இக்குறுஞ்செயலிகள் உருபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேஜைக் கணினி மூலம் இணைய வசதி பெற இயலாதவர்களுக்கு இக்கையடக்க கணினி அதிக வாய்ப்பை அளிக்கிறது. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலமாக தமிழ் வளர்ச்சி அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
தொகுப்புரை
இணையதளத்தின் மூலமாக தகவல்கள் பரிமாற, குறுஞ்செய்திகள் படிக்க, சமூக வலைதளங்களைப் பயன்படுத்த என்ற நிலையிலிருந்து தமிழிலக்கியம் தொடர்பான குறுஞ்செயலிகள் உருவாக்கத்திற்குப் பிறகு இலக்கிய வளர்ச்சி இணையத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதுடன் புதிய பரிணாமத்தைப் பெற்று வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சான்றெண் விளக்கம்
1.12 வது உலகத்தமிழ் இணைய மாநாட்டு இதழ் – 2013, ப.339
2. நன்றி, கூகுள் இணைய கடை  (பிளே ஸ்டோர்), பா.நாள். 21.09.2015

உறுதிமொழி
கைக்கணினியும் ஆண்ட்ராய்டு தமிழ் குறுஞ்செயலிகளும் என்னும் தலைப்பிலான இக்கட்டுரை என் சொந்த முயற்சியால் உருவானது என்றும்
இப்பதிவு, “வலைப்பதிவர் திருவிழா – 2015” மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015” க்காகவே எழுதப்பட்டது என்றும்
இதற்கு முன் வெளியான படைப்பல்ல முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்.

இணையமும் தமிழ் எழுத்துருக்களும்

இணையமும் தமிழ் எழுத்துருக்களும்
தொடக்கவுரை:
           சங்க இலக்கியம், சங்கம் மருவிய இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம், இக்கால இலக்கியம் என்ற நிலைகளிலிருந்து தமிழ் வளர்ச்சி பெற்று இன்று இணைய இலக்கியம் என்ற உயரிய நிலையை அடைந்து வருகிறது.
“பழையன கழிதலும் புதியன புகுதலும்
          வழுவல கால வகையி னானே”1
என்ற பவணந்தியாரின் வாக்கிற்கேற்ப இன்றைய தமிழ் இலக்கியம் இணையத்தில் பயணிக்கிறது என்றால் மிகையாகாது.
ஆவணப் பெட்டகம்
தமிழ் இலக்கியத்தை அடுத்தத் தலைமுறைக்குப் பத்திரப்படுத்திக் கொண்டு செல்லும் ஆவணப் பெட்டபகமாக இணையம் விளங்குகிறது. தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள், கதை, கவிதை, கட்டுரை போன்ற மதிப்புரைகள் இணையத்தில் பதிவேற்றுவதன் மூலம் அதனைப் பாதுகாக்க முடிகிறது.
வலைப்பூக்கள், திரட்டிகள், இணைய இதழ்கள், இணையதளங்கள் வாயிலாக பதிவேற்றப்பட்டு தமிழ் இலக்கியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவ்வகையில் பதிவேற்றும் இடுகைகளை மற்றவர் பார்க்க, படிக்க வேண்மானால் அதே வகையான எழுத்துருக்கள் படிப்பவரிடமும் தேவைப்படுகிறது. இல்லையெனில், அவ்வெழுத்துக்கள் திரையில் வேறு வடிவத்தில் தோன்றுகின்றன.
தமிழ் எழுத்துருக்கள்
தமிழ் மொழி வளர்ச்சியில் எழுத்துக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அதேபொன்று இணையத்தில் தமிழைக் கொண்டு செல்லவும் எழுத்துக்கள் எனப்படும் எழுத்துருக்களின் பங்கு அதிக முக்கியத்துவம் கொண்டது. இணையம் என்பது மனிதர்களை இணைக்கும் அறிவியல் சாதனமாக இருந்தால் அதில் எவ்வித சிக்கலும் இல்லை. மாறாக அவற்றை எழுத்து வடிவங்களுக்கு மாற்றி சேமிக்கும் போது ஒவ்வொரு எழுத்து முறையிலும் சிக்கல்கள் பல தொன்றுகின்றன.
ஒவ்வொரு எழுத்திற்கும் எண்களை நிர்ணயிக்கும் முறைக்கு குறியீட்டு முறை என்கிறோம். கணினியில் எழுத்துருக்கள் தோற்றம் பெற்ற தொடக்க காலத்தில் இக்குறியீட்டு முறையில் பலவிதமான சிக்கல்கள் தோன்றின. “ஆஸ்கி“ என்ற பெயரில் ஆங்கில எழுத்திற்கான எழுத்துரு வடிவத்தினை 7 பிட் அளவுள்ளதாக  உருவாக்கப்பட்டது. இதன் விரி ஆஸ்கி வடிவத்தில் 8 பிட் அளவுள்ளதாக அமைந்தது. இதில், மீதமிருந்த இடத்தில் 128 – 255 வரை இந்திய மொழிகளின் எழுத்துருக்களை வைக்க பொதுவான ”இஸ்கி” என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பிறகு, இதிலிருந்து தமிழ் எழுத்துக்களைத் தரப்படுத்த ”திஸ்கி” என்ற முறை உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ் எழுத்தக்கள் முறைப்படுத்தப்பட்டு மற்றவர்களிடமிருந்து ஒழுங்காக அமைந்த எழுத்துருக்கள் பெறப்பட்டன.
”1999 ல் அறிமுகம் செய்யப்பட்ட தமிழ் 99 விசைப்பலகையின் தட்டச்சு முறையில் தமிழ் தனி மொழி வடிவம் (டாம்) மற்றும் தமிழ் இரு மொழி வடிவம் (டேப்) என்று இரண்டு வழியிலான எழுத்துருக்கள் இருக்கின்றன.”2 தமிழ் தனிமொழி வடிவம் தமிழ் எழுத்துருக்களையும் தமிழ் இருமொழி வடிவம் ஆங்கிலம் கலந்த தமிழில் எழுத்துருக்களையும் தரக்கூடியது. இவ்வெழுத்தக்கள் ஒருங்குறி முறையில் எழுதக் கூடியதாக அமைந்திருந்தத.
தமிழ் எழுத்துருக்களின் வகைகள்
அரசின் ஒத்துழைப்புடனும் தனியார் பங்களிப்புடனும் தமிழில் டிஸ்கி, யுனிக்கோடு, டாம், டாப் போன்ற எழுத்துருக்கள் வெளியாயின. இவை கணினியிலும் இணையத்திலும் தமிழைக் கொண்டு செல்வதற்கு பெருதவி புரிந்தன.
1985 ஆம் ஆண்டு கு.கல்யாணசுந்தரம் அவர்களால், மயிலை எழுத்துரு வெளியிடப்பட்டது. விசைப்பலகையில் தமிழ் உரு இல்லாமல் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் திரையில் தொன்றும் விதத்தில் அமைக்கப்பட்டது.
1986 ஆம் ஆண்டில் முத்து.நெடுமாறன் அவர்களால் முரசு அஞ்சல் எழுத்துரு உருவாக்கப்பட்டது. தமிழ் 99, ஒருங்குறி முறையில் எழுத்துக்களைத் தரும் இது குறுஞ்செயலியாகவும் இதன் திருந்திய வடிவம் வெளிவருகின்றது. ஒருங்குறி முறைக்குப் பிறகு தமிழில் பாமினி, தமிழ் லேசர், சரஸ்வதி, கம்பன், திருவள்ளுவர், கணியன், வானவில், லதா, காவிரி, தாமிரபரணி போன்று பல பெயர்களில் எழுத்துருக்கள் பல தோன்றி வளர்ந்துள்ளன.
அச்சகப் பணிக்காக உருவாக்கப்பட்டு இன்று பல கணினிகளில் உள்ளீடு செய்யப்பட்ட எழுத்துரு வகை கீமேன் எனப்படும் செந்தமிழ் எழுத்துரு வகை ஆகும். இது, 285 க்கும் மேற்பட்ட எழுத்துரு வடிவத்தினைக் கொண்டுள்ளது. ஒருங்குறி வகையைச் சாராமல் தனியாரின் உருவாக்கமாக இருப்பதால் கணினியில் மட்டுமே பயன்படக்கூடியதாகவும் இணையத்தில் பயன்பாடற்றதாகவும் காணப்படுகின்றது.
எழுத்துரு மென்பொருள்களும் எழுத்துருக்களும்
எழுத்துருக்களை தரவேற்றும் வகைகளில் சில மென்பொருள்களும் உள்ளன. அவ்வகை மென்பொருள்களை  தரவேற்றம் செய்வதுடன் ஒருங்குறி போன்ற எழுத்துருக்களும் தானாகவே கணினியில் இடம்பெறுகின்றது. அவ்வகையில், என்.எச்.எம் எழுதி, எ.கலபபை, கீமேன், பொன்மடல், மென்தமிழ், அழகி, ஸ்ரீலிபி போன்ற எழுத்துரு வகை மென்பொருளைக் குறிப்பிடலாம். இவற்றில்,
என்.எச்.எம். எழுதியில், சாதாரண விசைப்பலைகை எழுத்துரு, ஒருங்குறி தமிழ் 99 எழுத்துரு, ஒலியியல் எழுத்துரு, பழைய தட்டச்சு எழுத்துரு, பாமினி எழுத்துரு தமிழ் இன்ஸ்கிரிப்ட் என ஆறு வகையான எழுத்துருக்களை பெற முடிகிறது. மேலும் இது தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பத்து இந்திய மொழிகளில் எழுத்துருக்களைப் பெற முடிகிறது.
எ.கலப்பை மூலமாக, இணையதளத்தில் அதிகம் பயன்படுத்தும் எழுத்துருக்களாக இவை உள்ளன. இதில், ஆங்கில ஒலியியல் எழுத்துரு முறை, பாமினி முறை, தமிழ் 99, தட்டச்சு முறை, இன்ஸ்கிரிப்ட் பொன்ற ஐவகை எழுத்துருக்களை பெற முடிகிறது.
சொற்பிழைத் திருத்தி, சந்திப்பிழைத் திருத்தி, வாக்கியப்பிழைத் திருத்தி, அகராதி போன்ற இலக்கணத் தீர்வுகளை பொன்மடல், பொன்மொழி மென்பொருள்கள் தீர்க்கின்றன. மென்தமிழ் மென்பொருள் முற்றிலும் எம்.எஸ் வேர்ட்க்குரிய தமிழ் மென்பொருளாகும். “கணினித் தமிழின் வளர்ச்சியையொட்டி தமிழ்மொழிக் கருவிகள் (சந்திப்பிழைத் திருத்தி, சொற்பிழைத் திருத்தி) தொடர்ந்து மென்மேலும் செழுமைபடுத்தப்படும்.” என்ற குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டது.
தொகுப்புரை
இணையத்தில் தமிழைக் கொண்டு செல்லும் வழியாக இவ்வெழுத்துருக்கள் உள்ளன. கணினி 0,1 என்ற மொழியில் கணக்கிட்டாலும் தமிழ் எழுத்துக்களை ஒருங்குறி முறையில் உருவாக்கினால் மட்டுமெ அவை உலக அளவில் இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டு படிக்கப்படும். இல்லையெனில், அவை யாருக்கும் பயன்படாது போகும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
சான்றெண் விளக்கம்
நன்னூல், சொல்லதிகாரம், நூ..462
ta.wikipedia.org/wiki/ தமிழ்
www.lingsoftsolutions.com

உறுதிமொழி
1. இணையமும் தமிழ் எழுத்துருக்களும் என்னும் தலைப்பிலான இக்கட்டுரை என் சொந்த முயற்சியால் உருவானது என்று உறுதியளிக்கிறேன்.
2. தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா 2015 - புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு - தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டி - 2015 க்காகவே எழுதப்பட்டது என்று உறுதியளிக்கிறேன்.
3. இக்கட்டுரை இதற்கு முன் வெளியான படைப்பல்ல.முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.

20/09/2015

என் ஊர்: கஞ்சாநகரம்

கஞ்சாநகரம் பெயர்க்காரணமும் மானக்கஞ்சாற நாயனாரும்

காவிரியால் வளம் பெற்று சிறந்து விளங்கும் அனேக ஊர்களில் கஞ்சாநகரமும் ஒன்று. தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது  இவ்வூர், வயல்கள் வளம் கொழிக்கும், எங்கும் பசுமை நிலைக்கும். இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. ஆனால்,
கஞ்சாநகரம், உன் ஊரில் கஞ்சா அதிகம் விளையுமா? உங்கள் ஊரில் உள்ளவர்கள் கஞ்சத்தனமானவர்களா? இந்தக் கேள்விகளை அதிகம் கேட்டுக் கேட்டு மனம் நொந்த நாட்கள் அதிகம் உண்டு. அவற்றிற்கு விளக்கம் தருவதாக இக்கட்டுரை அமைகிறது.
கஞ்சாநகரமும் பெரிய புராணமும்
கஞ்சாநகரத்தைப் பற்றி கூற வேண்டுமானால் முதலில் நான் பெரிய புராணத்தைப் பற்றி விளக்கியாக வேண்டும். நாயன்மார்களின் வரலாறுகளை விளக்கிக் கூறும் இந்நூல் திருத்தொண்டர் புராணம் அல்லது பெரிய புராணம் எனப்படுகிறது. இது சேக்கிழார் பெருமானால் சைவ சமயத்தை விளக்கும் வகையில் சுந்தரமூர்த்தி நாயனாரைத் தலைவனாகக் கொண்டு காப்பியமாக இயற்றப்பட்டது. இந்நூல் திருத்தொண்டர் தொகை என்ற நூலினை அடியொற்றி எழுதப்பட்டது.
63 நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் இந்நூல் மூன்று காண்டங்களையும் 13 சருக்கங்களையும் கொண்டுள்ளது. பன்னிரண்டாம் திருமுறையாக உள்ள இது முதற்காண்டத்தில் இலைமலிந்த சருக்கத்தில் பன்னிரண்டாவதாக மானக்கஞ்சாற நாயனார் புராணம் உள்ளது.
மானக்கஞ்சாறநாயனார் புராணம்
“கஞ்சநகர் மானக்கஞ் சாற னார்ச்சீர்க்
காதன்மகள் வதுவைமணங் காண நாதன்
வஞ்சமலி மதவிரதத் தலைவ னாகி
வந்துபுகுந் தவளாக மகிழ்ந்து நோக்கிப்
பஞ்சவடிக் காமென்ன வரிந்து நீட்டும்
பத்தரெதீர் மறைந்திறைவன் பணித்த வாக்கா
லெஞ்சலில்வண் குழல்பெற்ற பேதை மாதை
யேயர்பிராற் குதவியரு ளெய்தி னாரே”
என்று போற்றப்படும் இடமாகவும் மானக்கஞ்சாறர் வாழும் புண்ணிய பூமியாகவும் திகழ்ந்தது கஞ்சாநகரம் என்னும் திருப்பதி.
“மலைமலிந்த தோள் வள்ளல் மானக் கஞ்சாறன்
அடியார்க்கும் அடியேன்”
என்று போற்றப்படும்படி வாழ்ந்த மானக்கஞ்சாறர் பெருமங்களம் வைதீஸ்வரன்கோயில், திருப்புன்கூர், ஆனந்ததாண்டவபுரம், கஞ்சாநகரமாகிய தமது ஊர் ஆகிய ஐந்து ஊர்களையும் சேர்த்து கஞ்சாநகரத்தைத் தலைமையாகக் கொண்டு ஆண்டுவந்தார். செல்வங்கள் பல இருந்தும் பிள்ளைச் செல்வம் இல்லையே என்ற குறை தீற சிவத்தின் பேற்றால் பெண் மகளையும் பெற்றெடுத்து வளர்த்தனர். வளர்பிறை போன்று நாளொரு பொழுதும் பொழுதொரு மேனியுமாக வளர அவளுக்கு புண்ணியவர்த்தினி எனப் பெயரிட்டு தாலாட்டி வளர்த்தனர்.
மானக் கஞ்சாறரும் ஏயர்கோன் கலிகாமரரும்
குழந்தைப் பருவம் மாறி மணக்கோலம் எய்தும் வயது வந்ததால் அருகேயுள்ள வேளாண் குடியில் பிறந்த சிறந்த சிவபக்தரான ஏயர்கோன் கலிகாமரை மணம் பேசி முடித்தனர். திருமண நாள் நெருங்கவே அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்றது. சுற்றமும் நட்பும் சூழ ஏயர்கோன் கலிகாமர் கஞ்சாறூர் என்னும் தற்பொதைய கஞ்சாநகரத்தை வந்தடைந்தனர்.
மானக்கஞ்சாறரின் எம்பக்தியை உலகறியச் செய்யும் விதமாகவும் பலநாள் வேண்டுதலுக்கு விடை அளிக்கும் விதமாகவும் விடை இல்லாமல் சிவன் தனியே தோன்றி தவக்கோலம் பூண்டு வந்தான் அவர்களை சோதிக்க. சோதிவடிவான சிவன் வந்தான் சோதி இல்லாமல் ஆண்டியாக.
திருநீறு, எலும்பு மாலை, பரட்டை தலை, வெண்தாடி, முப்புரி நூல். சிவனின் அங்க அடையாளங்களாய் பார்ப்பதற்கு  இவனில்லை சிவனில்லை என்று தோன்ற வந்தான்.
சிவத்தொண்டராகிய கஞ்சாறரின் இயல்பையறிந்து விளையாட வந்தான். சிவபக்தியை உலகறிவிக்க வந்தான். மறுபுறம் மணக்கோலத்தில் மகள் மங்கலகரமாக மாலை அணிந்து மணமேடையேறும் நாளில் சிவனடியார்க்கு இல்லை என்னாமல் கொடுக்கும் கஞ்சாறர், தம் மார்பில் அணிந்திருந்த முப்புரி நூல் (பூணூல்) மக்கிவிட்டதாகவும் அதற்கு உன் மகளின் கருங்கூந்தல் வேண்டும் எனவும் கேட்க, மகளைக் கூப்பிட்டு அறிவாளால் மகளின் கூந்தலை வெட்டித் தந்த அந்த தருனம் சற்றும் சிந்தியாமல்… மணமகன் வெளியில் நிற்க… அடியார்க்காக இப்படி என்று அனைவரும் யோசிக்க… மன்றம் திகைத்தது.
மகளின் கூந்தல் அடியார்க்கு என்ற எண்ணத்தில் கஞ்சாறர். அடியார்க்கு அடி செய்யும் சேவையாக தம் மனைவியாகப் போகிறவள் செயல்பாடு கண்டு மகிழ்ந்து ஏயர்கோன். இப்படியாக நேரம் நகர…
அடியாராகிய சிவன் தன் சுயரூபம் காட்டி உன் பெருமையை உலகறிய செய்யவே அடியவராக வந்தேம் என்று கூறி பூணூலை (கருங்கூந்தலை) மகளிடமே கொடுத்தார். அனைவரின் கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர;. மகள் புண்ணியவர்த்தினியால் புண்ணியம் பெற்ற மானக்கஞ்சாறரரும்இ ஏயர;கோன் கலிகாமரும் சிவத்திடம் நாயனார் ஆனார்கள்.
மானக்கஞ்சாற நாயனாரால் இவ்வூர் இன்று கஞ்சாநகரம் என்று அழைக்கப்படுகிறது. ஆனந்ததாண்டவபுரத்தில் சில காலம் மாமன் வீட்டில் வாழ்ந்தாலும் சொந்தம் இங்குதான்.
இங்குள்ள புகழ்பெற்ற துங்கபாலஸ்தனாம்பிகை உடனுறை காத்ர சுந்தரேஸ்வரர் கோயில் கார்த்திகை நட்சத்திர பரிகார தலமாக உள்ளது. அதனுள், மானக்கஞ்சாற நாயனார் - புண்ணியவர்த்தினி - ஏயர்கோன் கலிகாம நாயனார் ஆகியோர்க்கு தனிச் சிலைகள் உள்ளன. சிறப்பு வழிபாடுகள் உண்டு.
கஞ்சாறூர் – கஞ்சானூர் - கஞ்சாநகரம். மானம் – பெருமை, பெருமைமிகு கஞ்சாறர் என்பது பிறகு கஞ்சாநகரம் என்பதற்காகிற்று. (காரைக்காலம்மையார், வில்லிப்புத்தூரார் போன்று) இதனைப் பறை சாற்றும் எச்சங்கள் இன்றும் எம்மூரில் உள்ளது குறிப்பிடத்தக்கது. எம் ஊர் துங்கபாலஸ்தனாம்பிகை உடனுறை காத்ர சுந்தரேஸ்வரர்  கோயிலுக்கு ஒருமுறை வந்துதான் பாருங்களேன்.
நன்றி.

08/09/2015

ஆனை முகனுக்கு என் முதல் பூ

  திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
         பெருவாக்கும் போதும் பெருக்கும் - உருவாக்கும்
         ஆதலால் வானோடும் ஆனைமுகத் தானைக்
          காதலால் கூப்புவர் தம்மை.              - கபிலர்


ஆனைமுக நாதனை மனதார வேண்டி வணங்கினால், பேசிய வார்த்தைகளும் செய்யும் காரியங்களும் கைகூடும். நன்மையாக அமையும்.