முன்னுரை
தமிழ்மொழியின் வளர்ச்சிப் பணியில் தனியார் அமைப்புகள் அரசுத் துறையுடன் இணைந்து பலவாறாக பங்காற்றி வருகின்றன. தனியார் அமைப்புகளின் மூலம் இணையத் தமிழானது இன்று வெகுவாக வளர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பல நிறுவனங்கள் தாங்களே பொருள்கள் செலவிட்டு இணையதளங்களை உருவாக்கி தமிழ் வளர்ச்சியைத் தொடர்ந்து செய்து வருகின்றன. அவ்வகையில, உத்தமம் (INFITT) அமைப்பானது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் இணையத்தில் தமிழ் வளர ஆற்றிய பங்கினையும் விவரிப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
உத்தமம்
உத்தமம் என்பது தமிழை இணையத்தின் வழியாகக் கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட ஒரு உலகளவிலான கூட்டமைப்பாகும். ”INFITT is a global non-profit non-govt. organization devoted to promoting Tamil computing. Officially registered as NPO in California, USA.”1 என்ற விதத்தில் இது இலாப நோக்கமின்றி தமிழ் கணினி பற்றியதான இயங்கும் அரசு சாரா அமைப்பாக கலிபோர்னியாவில் பதிவுபெற்று விளங்குகிறது.
“அது நிமிர்ந்து நிற்க ஒரு முதுகெலும்பாய்…
பரவி வியாபிக்க ஒரு நரம்பு மண்டலமாய்…
கிளர்ந்து வாழ ஒரு ரத்தமாய்…
துடித்து ஜீவிக்க இதயமாய்…
தமிழ் சுவாச நுரையீரலாய்…
இருக்க வேண்டிய கட்டமைப்பின் தர நிலை உயர உதவும் ஒரு மன்றமே INFITT.org”2 என்று புதுத் திண்ணை உத்தமத்தின் நிலை குறித்து விவரிக்கிறது.
உத்தமத்தின் தோற்றம்
இணையத்தில் தமிழ்மொழியினை வளர்ச்சிபெயச் செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்குடன் நடத்தப்பட்ட இணைய மாநாடுகளில், முதல் மாநாடு 1997 ல் சிங்கப்பூரிலும் இரண்டாவது மாநாடு சென்னையிலும் நடைபெற்றது. இம்மாநாடுகளின் நோக்கமாக விசைப்பலகையில் டேம், டேப் போன்ற தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்த வேண்டும், இணையத்தில் தமிழைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது பற்றியதேயாகும்.
மூன்றாவது தமிழ் இணைய மாநாடு, இலங்கையில் 2000 இல் நடைபெற்ற பொழுது, தமிழ் இணையம் தொடர்பானத் தனிப்பட்ட குரல்களையெல்லாம் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட அமைப்பே “உத்தமம்“ ஆகும். INFITT என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இது உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (International Fourm for Information Technology in Tamil) என்பதன் சுருக்கமே உத்தமம் என்பதாகும்.
www.infitt.org என்ற இணைய தளத்தை நிறுவி அதன் மூலம் உலகளவில் தமிழ் ஆர்வலர்களையும் இணைய இலக்கிய அமைப்புகளையும் ஒன்றிணைத்து தகவல்களைத் தெரிவிக்க வழிவகை செய்தது. இவ்வமைப்பு மூலம் தற்போது தனது பதினான்காவது மாநாட்டினை சிங்கப்பூரின் சிம் பல்கலைக்கழகத்தில் நடத்தியது.
உத்தமத்தின் உறுப்பினர்கள்
உத்தமம் அமைப்பு 2000 ல் தமிழ் இணைய மாநாட்டில் தொடங்கப்பட்ட போது, தமிழகத்திலிருந்து முனைவர் மு. பொன்னவைக்கோ, பேரா. வா.ச. குழந்தைசாமி, மு. ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர்களையும், மலேசியாவிலிருந்து முத்துநெடுமாறன் (முரசு அஞ்சல் தட்டச்சு உருவாக்கியவர்), சிங்கையிலிருந்து அருண்மகிழ்நன் போன்றொர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அம்மாநாட்டில் இவர்களின் மூலம் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டு மாநாடு சிறப்பாக நடைபெற்றது.
உத்தம அமைப்பின் பணிக்குழுக்கள், “ 1. தமிழ்க் கலைச்சொல் தொகுப்பு, 2. யூனிக்கோடு தமிழ் (UNICODE ஆய்வு) 3. இணையத்தள தமிழ் முகவரி அமைத்தல், 4. தமிழ் வரிவடிவக் குறியீட்டுத் தரப்பாடு, 5. ஆங்கில வரிவடிவத் தமிழ் தரப்பாடு, 6. தமிழ் எழுத்துப் படித்தறிதல் (Tamil OCR), 7. லினக்ஸில் தமிழ் (Tamil in Linux) 8. தமிழ் அனைத்து எழுத்துரு 16 –பிட்டு தரம். (TUNE/TACE)”3 என்று பிரிக்கப்பட்டு உலகளவில் தமிழ் தொழில்நுட்ப சான்றோர்களை இணைத்து இன்றளவும் மாநாடுகளை நடத்துகின்றது.
உத்தமமும் மாநாடுகளும்
மூன்றாம் தமிழ் இணைய மாநாட்டிலிருந்து சென்ற மே & ஜீன் 2015ல் சிங்கப்பூரில் நடைபெற்ற 14வது இணைய மாநாடு வரை தன்னுடைய பதினைந்தாவது ஆண்டு விழாவைக் கொண்டாடியுள்ளது உத்தமம் நிறுவனம். ஒவ்வொரு மாநாட்டிலும் கணினி – இணையம் தொடர்பானக் கருப்பொருள்களை முன்வைத்து இயங்கிவருகிறது. இதில்,
நான்காவது தமிழ் இணைய மாநாடு (2001 - மலேசியா) – வளர்ச்சிக்கான வழிகள் என்று மின்வணிக மொழியைத் தமிழாக்கி தமிழை வணிக மொழியாக்கும் முயற்சி என்ற கருப்பொருளையும்,
ஐந்தாவது தமிழ் இணைய மாநாடு (2002 - கலிபோர்னியா) – மின் இணையப் பயன்பாட்டில் மக்களிடையே நிலவும் இடைவெளியைக் குறைத்தல் என்ற கருப்பொருளையும்,
ஆறாவது தமிழ் இணைய மாநாடு (2003 – சென்னை) – தமிழ்க் கல்விக்குத் தகவல் தொழில்நுட்பம் என்ற கருப்பொருளையும்,
ஏழாவது தமிழ் இணைய மாநாடு (2004 சிங்கப்பூர்) – நாளைய தமிழ் தகவல் தொழில்நுட்பம் என்ற கருப்பொருளிளையும்
எட்டாவது தமிழ் இணைய மாநாடு (2009 – ஜெர்மனி) – கணினிவழித் காண்போம் தமிழ் என்ற கருப்பொருளிலும்
ஒன்பதாவது தமிழ் இணைய மாநாடு (2010 – கோயம்புத்தூர்) – கணினி தமி்ழ்மொழிக் கற்றல், கணினி மொழியியல் என்ற கருப்பொருளில் செம்மொழி மாநாட்டுடனும்
பத்தாவது தமிழ் இணைய மாநாடு (2011 – பென்சில்வேனியா) – கணினியினூடே செம்மொழி என்ற கருப்பொருளிலும்
பதினோறாவது தமிழ் இணைய மாநாடு (2012 – சிதம்பரம்) – செல்பேசி மற்றும் பலகைக் கணினிகளில் தமிழ்க் கணிமை என்ற கருப்பொருளிலும்,
பனிரெண்டாவது தமிழ் இணைய மாநாடு (2013 – மலேசியா) - “கையடக்கக் கணினிகளில் தமிழ்ச் கணிமை”4 என்ற கருப்பொருளிலும்
பதிமூன்றாவது தமிழ் இணைய மாநாடு (2014 – புதுச்சேரி) – ”தமிழ்மொழியில் இயல்மொழிப் பகுப்பாய்வு”5 என்ற கபருப்பொருளிலும்
பதிநான்காவது தமிழ் இணைய மாநாடு (2015 – சிங்கப்பூர்) – ”கணினிவழிக் கற்றல், கற்பித்தல், இயல்மொழியாய்வு, செல்பேசித் தகவல்நுட்பம்”6 போன்ற கருப்பொருள்களிலும்
என்ற கருப்பொருளிலும் விவாதித்து கருத்துக்களை வெளியிடும் வகையில் வல்லுனர் குழுவும் சான்றோர்களின் கட்டுரைகளும் வாசித்து விவாதிக்க இவ்வுத்தமம் அமைப்பு காரணமாக அமைந்தது.
உத்தமத்தின் பணிகள்
தமிழ்வளர்ச்சி்க்குப் பல வகையிலும் உதவி புரியும் வகையில் இவ்வமைப்பு செயல்படுகிறது. இது,
அடுத்தடுத்தத் தமிழ் இணைய மாநாடுகள் நடைபெறுவதைத் திட்டமிடவும்
அவை நடைபெறும் இடத்தைத் தேர்வு செய்திடவும்
மாநாடுகளின் கருப்பொருள்களை முன் வைத்திடவும்
தமிழ் இணைய மாநாடுகள் தொடர்பான அறிக்கைகளை வெளியிடவும்
மத்திய, மாநில அரசுகளின் துணையுடன் செயல்படவும்
இணையத்தமிழ் வளர்ச்சிக்கு தேவையான மாற்றங்களைச் செய்திடவும்
உத்தமம் அமைப்பானது பேருதவி புரிகின்றது.
முடிவுரை
தமிழ்மொழியினை இணையத்தில் கொண்டு செல்வதற்கு உத்தமம் நிறுவனம் பெரும்பங்காற்றி வருகிறது. தமிழ் இணைய மாநாடுகள் மூலம் இணையத்தின் வழியே கணினியிலும் கைக் கணினிகளிலும் தமிழ் மொழியை கொண்டு செல்லப்படுவதற்கு உத்தமம் அமைப்பு செயல்பட்டுள்ளதையும் இன்றளவும் தமிழ்ச் சான்றோர்களாலும் தொழில்நுட்ப வல்லுனர்களாலும் இவ்வமைப்பு வளர்க்கப்பட்டு வருவதையும் இவ்வளர்ச்சி தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி புரிகின்றது என்பதை அறிய முடிகிறது. இதுபோன்ற அமைப்புகள் இணையத்தில் தமிழ்மொழியை வளர்க உதவுகின்றன என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
சான்றெண் விளக்கம்
www.infitt.com, பா.நாள் 19.09.2015
www.Puthu.thinnai.com, பா.நாள் 20.09.2015
மு. பொன்னவைக்கோ, இணையத்தமிழ் வரலாறு, ப. 61
www.tamil.oneindia.com, இணைய இதழ், பா.நாள்: 21.09.2015
www.mudukulathur.com, பா.நாள். 22.09.2015
www.ta.m.wikipedia.org/wiki, பா.நாள். 22.09.2015
உறுதிமொழி
"தமிழ் கணினி உலகிற்கு உத்தமத்தின் பங்களிப்பு" என்னும் தலைப்பிலான இக்கட்டுரை என் சொந்த முயற்சியால் உருவானது என்றும்
இப்பதிவு, “வலைப்பதிவர் திருவிழா – 2015” மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் – 2015” க்காகவே எழுதப்பட்டது என்றும்
இதற்கு முன் வெளியான படைப்பல்ல முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கின்றேன்.