21/09/2015

இணையமும் தமிழ் எழுத்துருக்களும்

இணையமும் தமிழ் எழுத்துருக்களும்
தொடக்கவுரை:
           சங்க இலக்கியம், சங்கம் மருவிய இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம், இக்கால இலக்கியம் என்ற நிலைகளிலிருந்து தமிழ் வளர்ச்சி பெற்று இன்று இணைய இலக்கியம் என்ற உயரிய நிலையை அடைந்து வருகிறது.
“பழையன கழிதலும் புதியன புகுதலும்
          வழுவல கால வகையி னானே”1
என்ற பவணந்தியாரின் வாக்கிற்கேற்ப இன்றைய தமிழ் இலக்கியம் இணையத்தில் பயணிக்கிறது என்றால் மிகையாகாது.
ஆவணப் பெட்டகம்
தமிழ் இலக்கியத்தை அடுத்தத் தலைமுறைக்குப் பத்திரப்படுத்திக் கொண்டு செல்லும் ஆவணப் பெட்டபகமாக இணையம் விளங்குகிறது. தமிழ் இலக்கியம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள், கதை, கவிதை, கட்டுரை போன்ற மதிப்புரைகள் இணையத்தில் பதிவேற்றுவதன் மூலம் அதனைப் பாதுகாக்க முடிகிறது.
வலைப்பூக்கள், திரட்டிகள், இணைய இதழ்கள், இணையதளங்கள் வாயிலாக பதிவேற்றப்பட்டு தமிழ் இலக்கியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவ்வகையில் பதிவேற்றும் இடுகைகளை மற்றவர் பார்க்க, படிக்க வேண்மானால் அதே வகையான எழுத்துருக்கள் படிப்பவரிடமும் தேவைப்படுகிறது. இல்லையெனில், அவ்வெழுத்துக்கள் திரையில் வேறு வடிவத்தில் தோன்றுகின்றன.
தமிழ் எழுத்துருக்கள்
தமிழ் மொழி வளர்ச்சியில் எழுத்துக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ அதேபொன்று இணையத்தில் தமிழைக் கொண்டு செல்லவும் எழுத்துக்கள் எனப்படும் எழுத்துருக்களின் பங்கு அதிக முக்கியத்துவம் கொண்டது. இணையம் என்பது மனிதர்களை இணைக்கும் அறிவியல் சாதனமாக இருந்தால் அதில் எவ்வித சிக்கலும் இல்லை. மாறாக அவற்றை எழுத்து வடிவங்களுக்கு மாற்றி சேமிக்கும் போது ஒவ்வொரு எழுத்து முறையிலும் சிக்கல்கள் பல தொன்றுகின்றன.
ஒவ்வொரு எழுத்திற்கும் எண்களை நிர்ணயிக்கும் முறைக்கு குறியீட்டு முறை என்கிறோம். கணினியில் எழுத்துருக்கள் தோற்றம் பெற்ற தொடக்க காலத்தில் இக்குறியீட்டு முறையில் பலவிதமான சிக்கல்கள் தோன்றின. “ஆஸ்கி“ என்ற பெயரில் ஆங்கில எழுத்திற்கான எழுத்துரு வடிவத்தினை 7 பிட் அளவுள்ளதாக  உருவாக்கப்பட்டது. இதன் விரி ஆஸ்கி வடிவத்தில் 8 பிட் அளவுள்ளதாக அமைந்தது. இதில், மீதமிருந்த இடத்தில் 128 – 255 வரை இந்திய மொழிகளின் எழுத்துருக்களை வைக்க பொதுவான ”இஸ்கி” என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பிறகு, இதிலிருந்து தமிழ் எழுத்துக்களைத் தரப்படுத்த ”திஸ்கி” என்ற முறை உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தமிழ் எழுத்தக்கள் முறைப்படுத்தப்பட்டு மற்றவர்களிடமிருந்து ஒழுங்காக அமைந்த எழுத்துருக்கள் பெறப்பட்டன.
”1999 ல் அறிமுகம் செய்யப்பட்ட தமிழ் 99 விசைப்பலகையின் தட்டச்சு முறையில் தமிழ் தனி மொழி வடிவம் (டாம்) மற்றும் தமிழ் இரு மொழி வடிவம் (டேப்) என்று இரண்டு வழியிலான எழுத்துருக்கள் இருக்கின்றன.”2 தமிழ் தனிமொழி வடிவம் தமிழ் எழுத்துருக்களையும் தமிழ் இருமொழி வடிவம் ஆங்கிலம் கலந்த தமிழில் எழுத்துருக்களையும் தரக்கூடியது. இவ்வெழுத்தக்கள் ஒருங்குறி முறையில் எழுதக் கூடியதாக அமைந்திருந்தத.
தமிழ் எழுத்துருக்களின் வகைகள்
அரசின் ஒத்துழைப்புடனும் தனியார் பங்களிப்புடனும் தமிழில் டிஸ்கி, யுனிக்கோடு, டாம், டாப் போன்ற எழுத்துருக்கள் வெளியாயின. இவை கணினியிலும் இணையத்திலும் தமிழைக் கொண்டு செல்வதற்கு பெருதவி புரிந்தன.
1985 ஆம் ஆண்டு கு.கல்யாணசுந்தரம் அவர்களால், மயிலை எழுத்துரு வெளியிடப்பட்டது. விசைப்பலகையில் தமிழ் உரு இல்லாமல் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்கள் திரையில் தொன்றும் விதத்தில் அமைக்கப்பட்டது.
1986 ஆம் ஆண்டில் முத்து.நெடுமாறன் அவர்களால் முரசு அஞ்சல் எழுத்துரு உருவாக்கப்பட்டது. தமிழ் 99, ஒருங்குறி முறையில் எழுத்துக்களைத் தரும் இது குறுஞ்செயலியாகவும் இதன் திருந்திய வடிவம் வெளிவருகின்றது. ஒருங்குறி முறைக்குப் பிறகு தமிழில் பாமினி, தமிழ் லேசர், சரஸ்வதி, கம்பன், திருவள்ளுவர், கணியன், வானவில், லதா, காவிரி, தாமிரபரணி போன்று பல பெயர்களில் எழுத்துருக்கள் பல தோன்றி வளர்ந்துள்ளன.
அச்சகப் பணிக்காக உருவாக்கப்பட்டு இன்று பல கணினிகளில் உள்ளீடு செய்யப்பட்ட எழுத்துரு வகை கீமேன் எனப்படும் செந்தமிழ் எழுத்துரு வகை ஆகும். இது, 285 க்கும் மேற்பட்ட எழுத்துரு வடிவத்தினைக் கொண்டுள்ளது. ஒருங்குறி வகையைச் சாராமல் தனியாரின் உருவாக்கமாக இருப்பதால் கணினியில் மட்டுமே பயன்படக்கூடியதாகவும் இணையத்தில் பயன்பாடற்றதாகவும் காணப்படுகின்றது.
எழுத்துரு மென்பொருள்களும் எழுத்துருக்களும்
எழுத்துருக்களை தரவேற்றும் வகைகளில் சில மென்பொருள்களும் உள்ளன. அவ்வகை மென்பொருள்களை  தரவேற்றம் செய்வதுடன் ஒருங்குறி போன்ற எழுத்துருக்களும் தானாகவே கணினியில் இடம்பெறுகின்றது. அவ்வகையில், என்.எச்.எம் எழுதி, எ.கலபபை, கீமேன், பொன்மடல், மென்தமிழ், அழகி, ஸ்ரீலிபி போன்ற எழுத்துரு வகை மென்பொருளைக் குறிப்பிடலாம். இவற்றில்,
என்.எச்.எம். எழுதியில், சாதாரண விசைப்பலைகை எழுத்துரு, ஒருங்குறி தமிழ் 99 எழுத்துரு, ஒலியியல் எழுத்துரு, பழைய தட்டச்சு எழுத்துரு, பாமினி எழுத்துரு தமிழ் இன்ஸ்கிரிப்ட் என ஆறு வகையான எழுத்துருக்களை பெற முடிகிறது. மேலும் இது தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பத்து இந்திய மொழிகளில் எழுத்துருக்களைப் பெற முடிகிறது.
எ.கலப்பை மூலமாக, இணையதளத்தில் அதிகம் பயன்படுத்தும் எழுத்துருக்களாக இவை உள்ளன. இதில், ஆங்கில ஒலியியல் எழுத்துரு முறை, பாமினி முறை, தமிழ் 99, தட்டச்சு முறை, இன்ஸ்கிரிப்ட் பொன்ற ஐவகை எழுத்துருக்களை பெற முடிகிறது.
சொற்பிழைத் திருத்தி, சந்திப்பிழைத் திருத்தி, வாக்கியப்பிழைத் திருத்தி, அகராதி போன்ற இலக்கணத் தீர்வுகளை பொன்மடல், பொன்மொழி மென்பொருள்கள் தீர்க்கின்றன. மென்தமிழ் மென்பொருள் முற்றிலும் எம்.எஸ் வேர்ட்க்குரிய தமிழ் மென்பொருளாகும். “கணினித் தமிழின் வளர்ச்சியையொட்டி தமிழ்மொழிக் கருவிகள் (சந்திப்பிழைத் திருத்தி, சொற்பிழைத் திருத்தி) தொடர்ந்து மென்மேலும் செழுமைபடுத்தப்படும்.” என்ற குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டது.
தொகுப்புரை
இணையத்தில் தமிழைக் கொண்டு செல்லும் வழியாக இவ்வெழுத்துருக்கள் உள்ளன. கணினி 0,1 என்ற மொழியில் கணக்கிட்டாலும் தமிழ் எழுத்துக்களை ஒருங்குறி முறையில் உருவாக்கினால் மட்டுமெ அவை உலக அளவில் இணையத்தில் பலராலும் பார்க்கப்பட்டு படிக்கப்படும். இல்லையெனில், அவை யாருக்கும் பயன்படாது போகும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
சான்றெண் விளக்கம்
நன்னூல், சொல்லதிகாரம், நூ..462
ta.wikipedia.org/wiki/ தமிழ்
www.lingsoftsolutions.com

உறுதிமொழி
1. இணையமும் தமிழ் எழுத்துருக்களும் என்னும் தலைப்பிலான இக்கட்டுரை என் சொந்த முயற்சியால் உருவானது என்று உறுதியளிக்கிறேன்.
2. தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா 2015 - புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு - தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டி - 2015 க்காகவே எழுதப்பட்டது என்று உறுதியளிக்கிறேன்.
3. இக்கட்டுரை இதற்கு முன் வெளியான படைப்பல்ல.முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன்.

3 comments:

  1. மரியாதைக்குரியவரே,
    வணக்கம். தமிழை பாதுகாப்பதற்காக,தாங்கள் பதிவிட்டுள்ள வரிகள் சிறப்பானவை.உதாரணமாக, தமிழ் இலக்கியத்தை அடுத்தத் தலைமுறைக்குப் பத்திரப்படுத்திக் கொண்டு செல்லும் ஆவணப் பெட்டகமாக இணையம் விளங்குகிறது.என தெளிவுபடுத்தியுள்ளீர். வாழ்த்துக்களுடன் அன்பன்,
    C.பரமேஸ்வரன்,
    http:konguthendral.blogspot.com
    சத்தியமங்கலம்,
    ஈரோடு மாவட்டம்-638402

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. தமிழ் எழுத்துருக்களை குறித்து நிறைய தகவல்களை தந்திருக்கிறீர்கள்.
    தமிழ் எழுத்துருக்களுக்கு உள்ள குறியீட்டு தகுதரங்களை (encoding standard) குறிப்பிடுகையில் ஆங்கிலத்திலும் தந்தால் நன்றாக இருக்கும்.
    இஸ்கி, திஸ்கி என புதியவர்கள் படிக்கும் போது சிரிப்பு வந்துவிடும். கட்டுரையின் நல்ல நோக்கமும் தவறிவிட வாய்ப்பிருக்கிறது.
    ISCII - Indian Script Code for Information Interchange.
    TSCII - Tamil Script Code for Information Interchange
    TAM - Tamil Monolingual
    TAB - Tamil Bilingual
    ...என்றே எழுதலாம் தவறில்லை. வாழ்த்துகள்.

    ReplyDelete